இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை: ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Thursday,March 12 2020]
மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும், மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்ல வேண்டும் என்றும் ரஜினிகாந்த் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
மேலும் மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் அரசியல் கட்சி துவங்கி என்ன பலன் என்றும் ஐந்து அல்லது பத்து சதவீத ஓட்டுக்களை பிரிப்பதற்கு ரஜினிகாந்த் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அசுர பலத்துடன் உள்ள திமுக, அதிமுகவை நாம் எதிர்த்து நிற்கிறோம் என்றும், திமுகவில் கலைஞர், அதிமுகவில் ஜெயலலிதா என இரண்டு பெரிய ஆளுமைகள் இருந்தனர் என்றும் அதேபோல் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆளுமை தேவை என்றும், நல்ல ஆளுமை கொண்ட ஒரு தலைவரை கொண்டுவந்து மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக அரசியல் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும், அற்புதத்தை நிகழ்த்த தமிழக மக்கள் தயாராக இருக்கின்றனர் என்றும், இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி அலை உருவாக வேண்டும், ஒரு புரட்சி உருவாக வேண்டும் என்றும் அவ்வாறு உருவாகும்பட்சத்தில் மற்ற கட்சிகளின் அசுர பலம் காணாமல் போகும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.