'அண்ணாத்த' படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: ரஜினிக்கு கொரோனா பரிசோதனை?

  • IndiaGlitz, [Wednesday,December 23 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்வுக்கு பின் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பதை பார்த்தோம்

இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதத்திற்குள் இந்த படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக இயக்கிக் கொண்டிருந்தார்

இந்த நிலையில் திடீரென ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த ’அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக, இதனை அடுத்து படப்பிடிப்பிலிருந்து ரஜினிகாந்த் வெளியேறியதாகவும், ரஜினி உள்பட படக்குழுவினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இந்த தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இது ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட ஃபேமிலி சென்டிமென்ட் படம் என்பது குறிப்பிடத்தக்கது