விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினியிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல்!

  • IndiaGlitz, [Monday,January 18 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆன்மீக அரசியலை தமிழகத்தில் அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக பதிவு செய்து அவருடைய அரசியல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்

இந்த நிலையில் திடீரென சமீபத்தில் தனது உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தனது மனதை கஷ்டப்படுவதாக ரஜினிகாந்த் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுக உள்ளிட்ட கட்சிகளில் சேர்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் ரஜினி தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு விரும்பும் கட்சியில் ரசிகர்கள் சேரலாம் என ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது