கிருஷ்ணர், அர்ஜுனன் ஒப்பீடு குறித்து ரஜினிகாந்த் விளக்கம்!
- IndiaGlitz, [Wednesday,August 14 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர் 'காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு சிறப்பாக கையாண்டதாகவும், பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன் - அர்ஜுனன் போன்றவர்கள் என்றும், இவர்களில் யார் கிருஷ்ணன்? யார் அர்ஜுனன்? என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த பேச்சு குறித்து மூத்த அரசியல் தலைவர்கள் அமைதி காத்த நிலையில், ரஜினிகாந்த் என்ன பேசினாலும் அதை பெரிதாக்கி விளம்பரம் தேட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஒரு சில அரசியல்வாதிகள், ரஜினியின் இந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி ஒரு சில திரையுலக பிரபலங்களும் ரஜினியை விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தன்னுடைய கருத்து குறித்து இன்று போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டுள்ளனர். எனவே தான் அவர்களை கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என்றேன். காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை என்பதால் பாராட்டு தெரிவித்தேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியல் ஆக்கக்கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று ரஜினிகாந்த் கூறினார்.