ரஜினி அரசியலுக்கு வருவது ஏன்? அண்ணன் சத்தியநாராயணா விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,May 27 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினியின் உறுதியான பேச்சில் இருந்து இந்த முறை கண்டிப்பாக தலைவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்றே அனைத்து ரசிகர்களும் நம்பினர்.

மேலும் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் ரஜினி அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினர். ரஜினி பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்து வருவதாகவும், அரசியல் குறித்த அறிவிப்பை அவர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் சகோதரர் சத்யநாயாரண ராவ் நேற்று பெங்களூரில் கன்னட ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம், புதுக்கட்சி தொடங்குவது குறித்து தனது நண்பர்கள், நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்களிடம் முதல் சுற்று ஆலோசனை செய்து முடித்துள்ளார். எவ்வளவு ரசிகர்களைச் சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்தித்து விட வேண்டும் என்பதே ரஜினியின் விருப்பம். ஜூலைக்குள் அனைத்து மாவட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்ததும், புதிய கட்சியை அறிவிப்பார்.

தமிழ் நாட்டுக்கு புதிய அரசியல் சகாப்தம் மலரும். ஊழலை ஒழிப்பதுதான் ரஜினியின் முதல் நோக்கமாக இருக்கும். மக்களுக்கான திட்டங்கள் அவர்களுக்குப் போய்ச் சேருவதே இல்லையே என்ற வேதனை எப்போதும் ரஜினிக்கு உண்டு. இதையெல்லாம் சரி செய்யத்தான் அவர் அரசியலுக்கு வருகிறார். மேலும் ரஜினி இப்போதுள்ள எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டார், கட்சி கட்டமைப்பு, கொடி, சின்னம் போன்றவற்றை முடிவு செய்யும் வேலை நடந்து வருகிறது. இவ்வாறு சத்யநாயாரண ராவ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.