புதிய தொழில் துவங்கிய ரஜினி மகள்… நெகிழ்ச்சியில் பாராட்டும் ரசிகர்கள்!
- IndiaGlitz, [Saturday,October 23 2021]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, ஹுட் (Hoote) எனும் புதிய சமூகவலைத்தள நிறுவனத்தை துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா காலக்கட்டத்தில் சோஷியல் மீடியாக்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. மேலும் தொழில் துறையைப் பொறுத்தவரை சோஷியல் மீடியா நிறுவனங்கள் ஒரு பணம் கொழிக்கும் வழிமுறையாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் சவுந்தர்யா “இந்தியாவின் முதல் குரல்” என்பதை அடிப்படையாக வைத்து “ஹுட்“ எனும் சோஷியல் மீடியா நிறுவனத்தை வரும் அக்டோபர் 25 ஆம் தேதி காலை 9 மணிக்கு துவங்க உள்ளார்.
இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த சவுந்தர்யா, அவரது அப்பா நடித்த “கோச்சடையான்“ திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அதைத் தொடர்ந்து வேறு படங்கள் எதையும் அவர் இயக்கவில்லை.
தற்போது தொழில் துறையில் தடம் பதித்தள்ள அவர் “ஹுட்“ எனும் சோஷியல் மீடியா நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளார். இந்தத் தகவலை அறிந்த ரசிகர்கள் சிலர் விளையாட்டாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு போட்டியாக சவுந்தர்யா சோஷியல் மீடியா நிறுவனம் துவங்க உள்ளதாகவும் சமூகவலைத் தளங்களில் கிண்டல் செய்திருந்தனர்.
காரணம் டிரம்பின் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்கள் கடந்த ஜனவரியில் இருந்து முடக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் “ட்ரூத்“ எனும் புதிய சோஷியல் மீடியா நிறுவனம் துவங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை ஒப்பிட்டு சவுந்தர்யாவை கிண்டல் செய்த ரசிகர்கள் அவரது முயற்சியைப் பாராட்டியும் வருகின்றனர்.