உலகிலேயே இதுதான் முதல்முறை: ரஜினிகாந்த்தின் பாராட்டு யாருக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,May 20 2019]

இயக்குனர், நடிகர் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளாவிட்டாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

பார்த்திபன் அவர்கள் ஒரு வித்தியாசமான படைப்பாளி. வித்தியாசமாக சிந்திக்க கூடியவர். இத்தனை திறமைசாலியான அவர் கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தது எனக்கு ஒரு சின்ன வருத்தம் இருந்தது. இதுகுறித்து நான் சமீபத்தில் அவரை சந்தித்து கேட்டபோது தற்போது ஒரு படம் இயக்கி வருவதாக கூறினார். அதுதான் 'ஒத்த செருப்பு'.

இந்த படத்தின் சிறப்பு ஒரே ஒருவர் மட்டுமே நடித்த படம் என்பதுதான். கடந்த 1960களில் சுனில்தத் மட்டுமே நடித்த ஒரு படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு பின்னர் இந்தியாவில் இரண்டாவதாக, தென்னிந்தியாவில் முதல்முறையாக ஒருவர் மட்டுமே நடித்த படம் வருகிறது. அதிலும் பார்த்திபனே இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ளார். இது உலகிலேயே முதல்முறை ஆகும். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஒரு சின்னப்படம் வெற்றி அடைய வேண்டும் என்றால் எனக்கு தெரிந்து நான்கு முக்கிய விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று படத்தின் கரு. படத்தின் கரு வித்தியாசமானதாகவும் யாரும் சொல்லாத வகையிலும் இருக்க வேண்டும். இரண்டாவதாக மினிமம் பட்ஜெட்டில் இருக்க வேண்டும். மூன்றாவதாக சினிமாட்டிக்காக இல்லாமல் ரியலிஸ்ட்டிக்காக இருக்க வேண்டும். நான்காவதாக நன்றாக பப்ளிசிட்டி செய்ய வேண்டும். இந்த நான்கும் இந்த படத்தில் இருப்பதாக கருதுகிறேன்.

இந்த படத்திற்கு எனது அருமை நண்பர்கள் கமல்ஹாசன், ஷங்கர், பாக்யராஜ் ஆகியோர் பப்ளிசிட்டி செய்துள்ளதால் இந்த படம் மக்களை சென்றடையும் என்றும், இந்த படம் நல்ல வெற்றி பெற்று ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை பெற வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.