அறிக்கை பொய், ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினிகாந்த் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,October 29 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது பெயரில் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் பரவி வந்தது
ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்றும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ரஜினிகாந்த் அரசியல் காரணங்களுக்காக வெளியே வந்தால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த நிலையில் இந்த அறிக்கை பொய்யானது என்றும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இந்த அறிக்கை வெளியாகவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் சதி செய்து போலியான அறிக்கையை வெளியிட்டு இருப்பதாகவும் ரஜினியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்
இந்த நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரை குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020