உபி முதல்வர் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்.. இதுதான் காரணம்..!
- IndiaGlitz, [Sunday,August 20 2023]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட நிலையில், அதனை அடுத்து அவர் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தார். இதனை அடுத்து உத்தர பிரதேசம் மாநிலம் சென்ற ரஜினிகாந்த், அம்மாநில கவர்னர் ஆனந்திபென் அவர்களை சந்தித்தார். அதன் பிறகு உத்தர பிரதேச மாநில துணை முதலமைச்சர் உடன் ரஜினிகாந்த் மற்றும் லதா ஆகிய இருவரும் ’ஜெய்லர்’ படத்தை பார்த்தனர்
இந்த நிலையில் நேற்று இரவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ஆசி பெற்றார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
51 வயது யோகி ஆதித்யநாத் கால்களில் 71 வயது ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி உள்ளது. ஆனால் யோகி ஆதித்யநாத் அவர்கள் முதலமைச்சர் மற்றும் அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் இந்து மத துறவி. தீட்சை பெற்றவர்.
சிறு வயதிலேயே கோரக்நாத் என்ற மடத்தில் ஐக்கியமானவர். பிற்காலத்தில் அந்த மடத்தின் தலைமை மடாதிபதி ஆகவும் உயர்ந்தார். இந்து மதத்தைப் பொறுத்தவரை மடாதிபதிகள் சிறு வயதினராக இருந்தாலும் அவர்களுடைய பதவிக்கு மரியாதை கொடுத்து காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தான் ஒரு முதலமைச்சர், அரசியல்வாதி என்ற வகையில் இல்லாமல் இந்து மத துறவி மற்றும் மடாதிபதி என்ற வகையில் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து வணங்கியதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர்.