பரியேறும் பெருமாளுக்கு பாராட்டு தெரிவித்த இரண்டு பிரபலங்கள்

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பாசிட்டிவ் விமர்சனங்களும் அனேகமாக வேறு எந்த படத்திற்கும் கிடைத்திருக்காது என்றே கருதப்படுகிறது. இந்த படத்தை பிரபலங்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மாரி செல்வனை நேரில் அழைத்து பாராட்டினார். இதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'எப்படி சொல்வது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அழைத்திருந்தார். பரியேறும் பெருமாள் பார்த்த தன் அனுபவத்தையும் அதன்மூலம் தான் அடைந்த மன அதிர்வையும் பகிர்ந்து கொண்டதோடு எங்களின் பெரும் உழைப்பையும் கனவையும் சிலாகித்து பாராட்டினார். ஒரு இயக்குனராக உடலும் மனமும் அதிர்ந்த, அந்த நிமிடங்கள் என்றைக்கும் யாரிடமும் பகிர முடியாதவை. மிக்க நன்றி சூப்பர் ஸ்டார் அவர்களே என்று பதிவு செய்திருந்தார்

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டியுள்ளார். இந்த படம் ஒரு அற்புதமான படம் என்றும், எங்கள் இதயத்தில் தங்கிவிட்ட படம் என்றும், இந்த படத்தில் நடித்த அனைவரது நடிப்பும் அபாரம் என்றும் இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.