நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் ரஜினி-கமல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இருவரும் சில திரைப்பட நிகழ்ச்சிகள் உள்பட ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்தவகையில் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்வதாகவும் இந்த விழாவில் டிரைலரும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே விழாவில் பங்கு கொள்ள இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.