விஜய்-அட்லிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு தெரிவித்தாரா?

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களே பரபரப்பில் உள்ளது.

பாஜக தலைவர்களுக்கு 'மெர்சல்' படக்குழுவினர் யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை என்றாலும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக என அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

அதுமட்டுமின்றி திரையுலகினர்களும் 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். நேற்றிரவு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் 'மெர்சலுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த நிலையில் சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் தனது டுவிட்டரில் மெர்சலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

ரஜினியின் டுவிட்டர் பக்கம் போன்றே போலி டுவிட்டர் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் பதிவு செய்த டுவீட்டில், 'விஜய்க்கும், மெர்சல் படக்குழுவினர்களுக்கும் எனது ஆதரவு உண்டு. ஜிஎஸ்டிக்கு எதிரான கூர்மையான வசனங்கள் எழுதிய இயக்குனர் அட்லிக்கு பாராட்டுக்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் ரஜினி தனது டுவிட்டரில் இதுவரை மெர்சல் குறித்து இன்னும் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.