இலங்கை செல்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு

  • IndiaGlitz, [Saturday,March 25 2017]

லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் தனது தாயார் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் இலங்கையில் கட்டியுள்ள 150 வீடுகளை தமிழர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது இந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் செல்லக்கூடாது என்று ஒருசிலர் அரசியல் தலைவர்களும், செல்ல வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமியும் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 'தான் இரண்டு விஷயங்களுக்காக இலங்கை செல்ல சம்மதித்ததாக கூறியுள்ளார். ஒன்று உரிமைக்காக ரத்தம் சிந்திய தமிழ் சொந்தங்களின் மண்ணை நேரில் சென்று அந்த இடத்தை பார்த்து, அந்த காற்றை சுவாசிக்க வேண்டும் என்று இருந்த வெகுநாளைய ஆசை.

இரண்டாவதாக இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிரிசேனா அவர்களை நேரில் சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்பட அவரிடம் வேண்டுகோள் வைப்பது.

மேற்கண்ட இரண்டு காரணங்களுக்காக தான் இலங்கை செல்ல சம்மதித்து இருந்ததாகவும், ஆனால் தொல்.திருமாவளவன், வைகோ, வேல்முருகன் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த விழாவில் ஒருசில அரசியல் காரணங்களுக்காக கலந்து கொள்ளக்கூடாது என்று தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும், அந்த காரணங்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டதால் இந்த விழாவில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கு வாழும் தமிழ் மக்களை சந்தித்து அவர்களை மகிழ வைத்து அந்த புனிதப்போர் பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் அப்போதும் அதை அரசியலாக்கி என்னை போக விடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.