ரஜினியால் இவரை எச்சரிக்கை செய்ய முடியுமா? ரவிகுமார் எம்பி கேள்வி
- IndiaGlitz, [Monday,May 11 2020]
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள், இரண்டே நாட்களில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தாலும் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு நடவடிக்கைக்கு கமல்ஹாசன் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் தமிழக அரசின் இந்த முடிவுக்கு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அவர் தனது டுவிட்டில் கூறியதாவது: ‘இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசுக்கு ரஜினி விடுத்த எச்சரிக்கை குறித்து கருத்து கூறிய விடுதலை சிறுத்தைகள் எம்பி டாக்டர் ரவிக்குமார் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’மாநில அரசை எச்சரித்துள்ள ரஜினிகாந்த் மத்திய அரசை எச்சரிப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். டாஸ்மாக் விவகாரம் குறித்த ரஜினிகாந்த் அவர்களின் அறச்சீற்றம் உண்மை என்றால் நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை அவர் அரசை எச்சரிக்கை செய்ய வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார். டாக்டர் ரவிக்குமாரின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்த்தும் கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.
ரஜினிகாந்த் மத்திய அரசை எச்சரிப்பாரா? pic.twitter.com/hiWvwUB0x6
— Dr Ravikumar M P (@WriterRavikumar) May 10, 2020