அண்ணா அறிவாலயத்தில் ஒட்டப்பட்ட ரஜினி ஆதரவு போஸ்டர்: சென்னையில் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,October 30 2020]
கடந்த இரண்டு நாட்களாக ரஜினி வெளியிட்டதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த கடிதம் குறித்து நேற்று டுவிட்டரில் ரஜினிகாந்த் விளக்கமளித்தார். அந்த கடிதத்தை தான் வெளியிட வில்லை என்றாலும் அதில் உள்ள தனது உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மை என்றும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவு எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து உடல்நிலை காரணமாக ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று ஒரு தரப்பினரும் ’ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு திடீரென அவர் அரசியல் வருகை குறித்து அறிவிப்பார்’ என்று இன்னொரு பிரிவினரும் கூறிவருகின்றனர்/
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் ரஜினிக்கு ஆதரவாக ஒரு சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ரஜினி அரசியலுக்கு வந்தால், திமுகவுக்கு தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் திமுகவின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் சுற்றுச்சுவரிலேயே ரஜினி ஆதரவு போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் ’மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நீங்க வாங்க ரஜினி. எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போஸ்டரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.