அமித்ஷாவின் பதவியை கொடுத்தாலும் ரஜினி ஏற்க மாட்டார்: பிரபல அரசியல்வாதி
- IndiaGlitz, [Wednesday,September 04 2019]
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு இல கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், எஸ்வி சேகர், வானதி சீனிவாசன் உள்பட 8 பேர் கடும் போட்டியில் உள்ளனர். இந்த பதவிக்கு விரைவில் புதிய நபர் ஒருவர் நியமனம் செய்யப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற செய்தியை வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், திருச்சி தொகுதியின் எம்பியுமான திருநாவுக்கரசு அவர்கள் கூறும்போது 'பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இல்லாத ரஜினியால் எப்படி பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் அதுபோன்ற முடிவுகளை எப்போதும் எடுக்க மாட்டார் என்றும், மாநில தலைவர் பதவி மட்டுமல்ல அமித்ஷா வகித்து வரும் தேசியத் தலைவர் பதவி கொடுத்தாலும் ரஜினி ஏற்க மாட்டார் என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
இந்த நிலையில் ரஜினிக்கு நெருக்கமான இன்னொரு அரசியல்வாதியான கராத்தே தியாகராஜன் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறிய போது 'வரும் மார்ச் மாதத்திற்குள் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்றும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார் என்று தெரிவித்துள்ளார்