8 மாதங்களில் ரூ.1000 கோடி பிசினஸ்: சூப்பர் ஸ்டாரின் வசூல் வேட்டை
- IndiaGlitz, [Tuesday,January 29 2019]
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்து வரும் ரஜினிகாந்த், இந்த வயதிலும் மெகா ஸ்டார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.
ரஜினி காலத்து நடிகர்கள் தற்போது அவருக்கு போட்டியே இல்லாமல் ஒதுங்கி நிற்கும் நிலையில் இன்னும் அவருடைய படங்கள் வசூல் செய்யும் தொகை அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த எட்டு மாதங்களில் ரஜினிகாந்த் நடித்த மூன்று படங்கள் வெளியாகி மொத்தம் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான ரஜினியின் 'காலா' திரைப்படம் ரூ.150 கோடியும், கடந்த நவம்பர் மாதம் வெளியான '2.0' திரைப்படம் ரூ.650 கோடியும் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகிய 'பேட்ட' திரைப்படம் ரூ.200 கோடியும் ஆக மொத்தம் கடந்த ஆண்டு ஜூன் முதல் இவ்வாண்டு ஜனவரி வரையிலான 8 மாதங்களில் ரூ.1000 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.