சிறுவனின் நேர்மைக்கு ரஜினிகாந்த் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு
- IndiaGlitz, [Sunday,July 15 2018]
ஈரோட்டை சேர்ந்த துணி வியாபாரி முகமது யாசின் என்பவரின் மகன் பாட்ஷா பள்ளி அருகே கீழே இருந்த ரூ.500 கட்டு ஒன்றை எடுத்து அவரது ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த பணம் பின்னர் காவல்துறையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து பாட்ஷாவின் நேர்மைய காவல்துறையினர் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர்.
ஒரே நாளில் நேர்மையின் ஹீரோவாக மாறிவிட்ட பாட்ஷா, ரஜினியை சந்தித்து ஆசிபெற வேண்டும் என்று விரும்பினார். இதனையடுத்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளின் உதவியால் இன்று யாசின் குடும்பத்தினர் ரஜினியை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது
பணம் என்றால் பிணமும் வாயை தொறக்கும் என்று கூறப்படும் இந்த காலத்தில் கீழே இருந்த பணத்தை தன்னுடைய பணம் இல்லை என்று நினைத்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்த இந்த சிறுவனின் குணம் மிகப்பெரிய விஷயம். இந்த பையனை அந்த அளவுக்கு நல்ல குணத்துடன் வளர்த்த பெற்றோர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த சிறுவன் என்ன படிக்க விரும்புகிறோரா, அந்த படிப்புக்கு நான் முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளேன். யாசினை என் மகன் போல் நினைத்து படிக்க வைப்பேன்'; என்று ரஜினி கூறியுள்ளார்.
சிறுவன் யாசினின் நேர்மைக்கு அவர் விரும்பும் விலைமதிப்பில்லா கல்வி, ரஜினி மூலம் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.