close
Choose your channels

நடிகர்களிடம் கேட்பது யாசகம் அல்ல, நஷ்டஈடு!

Saturday, December 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த மண்டையில மண்` சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது தெரியாமலிருக்காது. உடல் மண்ணுக்கு, உயிர் ஹீரோவுக்கு` என்று கடந்த பல ஆண்டுகாலமாகவே ஒரு பாலிஸி வைத்திருக்கும் ரசிகர்களுக்கெல்லாம், இந்த வெள்ளம் தந்த மெசேஜ் அசாதாரணமானது! உன் தலைக்குள் என்ன இருந்ததோ, அதை எடுத்துதான் வெளியே வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு போனதை அவன் அழுத்தமாக உணர்வதற்கு இதுபோல் இன்னும் நாலு வெள்ளம் வரவேண்டும்!

ஒருபுறம் இதெல்லாம் நன்கு புரிந்தாலும், தன் ஹீரோவை விட்டுக் கொடுத்து பழகாத நெஞ்சமும், நழுவாத ஈகோவும் இன்னும் தலைவன் வருவான் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டேயிருக்கிறது. ஹீரோ ஜெயிப்பதுதான் க்ளைமாக்ஸ்சின் வழக்கம். ஐயோ பாவம்… இந்த க்ளைமாக்சிலும் அதுதான் நடக்கப் போகிறது.

சென்னையில் திரும்பிய இடமெல்லாம் சாலைகளில் படகு ஓடும் என்று ஒரு சினிமா எடுத்திருந்தால் கூட, “அடச்சே… இப்படியெல்லாமா நடக்கும்? ஏன்தான் இப்படி நடக்காத விஷயத்தையெல்லாம் படமா எடுக்குறாங்களோ…?” என்று அலுத்துக் கொண்டிருப்பார்கள் மக்கள். ஆனால் அதே வெள்ளம் அவரவர் வீட்டு வாசலை முத்தமிட்ட வினாடிகள் மிகக் கொடூரமானது. அதற்கப்புறம் நடந்ததெல்லாம் அந்த வெள்ளத்தை விட கொடூரமானவை!

எல்லாரும் எழுதி விட்டார்கள். காணொளியாய் காண்பித்தும் விட்டார்கள். அந்த ரணத்தை இனிமேலும் விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால் இந்த வெள்ளத்தில் தான் பூஜித்த ஹீரோ, பால் ஊற்றிய ஹீரோ, பசை தடவி போஸ்டர் ஒட்டிய அந்த ஹீரோ, ஆறுதலுக்காக கூட முன் வந்து தன் முகத்தையோ மூக்கையோ நீட்டவில்லையே என்ற கோபம் ரசிகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ? அந்த ரசிகர்களை பெற்றவர்களுக்கு இருக்கிறது. வளர்த்தவர்களுக்கு இருக்கிறது. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கு இருக்கிறது.

நதிகளை இணைத்தால் ஒரு கோடி தருவேன்` என்று எத்தனையோ வருடங்களுக்கு முன் அறிவித்த ரஜினி, சாலையே நதியாக ஓடி, அதில் சடலங்களும் மிதந்தோடிய பிறகும் முன்பு கொடுத்த பத்து லட்சத்தோடு அமைதியாகிவிட்டார். அந்த ஒரு கோடியை முதல் நபராக கொடுத்து, நதிநீர் இணைப்பு இயக்கத்தை அவரே ஆரம்பித்திருந்தால் அவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு இந்நேரம் அந்த லட்சியம் நிறைவேறியிருக்கும். டுமாரோ என்பதே டுபாக்கூரின் இன்னொரு சொல்தானே?

ஒரு துளி வியர்வைக்கு ஒரு துளி தங்கக் காசு கொடுத்த தமிழனுக்கு அவர் வைத்த விலை இந்த பத்து லட்சம் மட்டும்தான்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தனிப்பட்ட முறையில் விளம்பரமில்லாமல் பல கோடிகள் செலவு செய்து வருகிறாராம். எப்படி? ராகவேந்திரா மண்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தாரே, அப்படியா?

நல்லவேளை… கமல் இன்னும் ஐந்து லட்சம் அதிகம் கொடுத்திருக்கிறார். அதற்கு பின்னாலிருப்பது மனிதாபிமானம் இல்லை. ஒரு பேட்டியும் அதன் விளைவுகளும்தான்! “நான் முறையா வரி கட்றேன். என் வரிப்பணம் எங்கே போனது? நான் ஏன் இதற்கெல்லாம் பணம் தர வேண்டும்?`` என்று அவர் கேட்கப் போக, அங்கு ஆரம்பித்தது வில்லங்கம். அப்போதுதான் லேசாக உறைத்தது ரசிகர்களுக்கு.

இப்படி அவரவர் முக லட்சணத்தை அவரவர் காண்பித்துக் கொண்டிருக்க, ரஜினி, கமல் தேவலாம் என்றாக்கினார்கள் அஜீத்தும் விஜய்யும். அவர்களாவது வெள்ளத்தை சபித்துக் கொண்டே வழங்கினார்கள். இவர்கள் முகத்தையே காட்டவில்லை. இவர்களிடமிருந்து சிங்கிள் மணி கூட பெயரவில்லை. விஜய் கோவாவில் ஷுட்டிங்கில் இருக்கிறாராம். அஜீத் தன் வீட்டை திறந்து வைத்து அதில் பதினெட்டு பேரை தங்க வைத்திருக்கிறாராம். இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ரஜினியே பத்து என்று அடக்கிக் கொண்ட பின்பு, ஐயோ பாவம்… இருபத்தைந்து கோடியும், தயாரிப்பாளர் ஏமாந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதல் கோடிகளும் சம்பளமாக வாங்கும் இவர்கள் ஏன் தர வேண்டும்?

சென்னையில் சில காலம் தங்கி படித்த ஒரு கடமைக்காக 2 கோடி கொடுத்த தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண் எங்கே? நீங்கள் எங்கே? ரவிதேஜா 25 லட்சம், பிரபாஸ் 10 லட்சம், என்று நம் கடைக்கோடி கிராமம் அறியாத ஹீரோக்களே, இந்த வெள்ளத்தையும் அதன் வலியையும் உணர்ந்திருக்கும் போது, பத்து லட்சத்தை கொடுப்பதற்குள் பஞ்சாங்கம், திதியெல்லாம் பார்க்கும் இவர்களை இனிமேலும் போற்றுதற்கு நாக்கு புரளுமா?

“அதென்னாங்கடா… ஆ ஊன்னா ரஜினி தரல. கமல் தரல. அஜீத் தரல. விஜய் தரலன்னு ஆரம்பிச்சுடுறீங்க? கோடி கோடியா கொள்ளையடிச்ச கவுன்சிலரை கேட்க தைரியம் இருக்கா? எம்.எல்.ஏ வை, எம்.பியை. மந்திரியை கேட்க முடியுமா உன்னால்?” ஒரு சில சினிமா வெறியர்களால் சமூக வலைதளங்களில் வைக்கப்படும் இந்த கேள்வியும், ஆக்ரோஷமாக பொங்கும் ரசிகர்களும் இருக்கும்வரை, மேற்படி ஹீரோக்களுக்கு அழிவேயில்லை!

“ஆமாங்கடா…” என்று திருப்பிக் கேட்க நிமிஷம் போதாது. அந்த நிமிஷம்தான் இந்த நிமிஷம். இந்த கட்டுரைக்கான நிமிஷம்!

இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் சினிமா இருக்கிறது. அங்கிருக்கும் ஹீரோக்களுக்கும் அபரிமிதமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் வேறெங்கும் இல்லாதளவுக்கு இங்கு ஒரு சமுதாயத்தையே மடை மாற்றிவிடுகிற ஆற்றல் இந்த ரஜினி கமல் அஜீத் விஜய்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகை தினங்களிலும் இவர்களின் படங்கள் வருகின்றன. டிக்கெட் குறைந்த பட்சம் 300 லிருந்து அதிக பட்சம் 1000 வரைக்கும்! மாதம் முழுக்க உழைத்த பணத்தை, குடும்பத்திற்கு செலவழிக்க முடியாமல் டிக்கெட்டுக்கு கொட்டி, அதையெல்லாம் சம்பளமாக உங்கள் தலையில் கொட்டுகிறவன் நீங்கள் திரும்ப செய்ய வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

டாஸ்மாக் வருமானம், இலவச கிரைண்டராகவும் மிக்சியாகவும் வரும்போது, டிக்கெட் வருமானம் மட்டும் உங்கள் வீட்டு லாக்கரை விட்டு வெளியே வராது என்றால் எப்படி?

இப்போதும் எம் தமிழர் வாழ்வில் ஒரு முறை இருக்கிறது. அதற்கு பெயர் மொய்`! கல்யாணமோ, கருமாதியோ? காது குத்து திருவிழாவோ? ஊரே சேர்ந்து சிறுக சிறுக கொடுப்பார்கள். அவரவர் வீட்டில் அது அது நடக்கும்போது, அதை திருப்பி எதிர்பார்ப்பார்கள். “கட் அவுட் பாலை வேண்டுமானால் நீ வைத்துக் கொள். கை வலிக்க போஸ்டர் ஒட்டும் உழைப்பை வேண்டுமானால் நீயே வைத்துக் கொள். ஆனால் அவன் செய்த மொய் பணத்தை திருப்பிக் கொடு” என்று கேட்க, யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?

ஒரு கவுன்சிலருக்கு இல்லாத செல்வாக்கு, ஒரு அமைச்சருக்கு இல்லாத செல்வாக்கு உங்களை போன்ற டாப் ஹீரோக்களுக்கு இருக்கிறது. அந்த செல்வாக்கு என் மக்களை எங்கே கொண்டு போய் விட்டிருக்கிறது தெரியுமா?

முன்பெல்லாம் கிராமத்தில் குளத்தை தூர் வாரவும், ஆற்றில் படர்ந்திருக்கும் படர் தாமரையை வெட்டி எறியவும் வீட்டுக்கு ஒரு இளைஞன் கிளம்புவான். இப்போது அத்தகைய இளைஞன் ஒருவன் கூட இல்லை. எல்லாருக்கும் ரசிகர் மன்றம் திறக்கிற வேலை இருக்கிறது. அங்கு கொடி ஒட்டுகிற பணி இருக்கிறது. போஸ்டருக்கு போண்டா படைக்கிற கடமை இருக்கிறது. கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற வேலை இருக்கிறது. அதனால்தான் கிராமத்தில் கூட எங்கள் குளங்களை காணவில்லை. ஆற்றை அடைத்துக் கொண்டு வளர்ந்து நிற்கிறது வேண்டாத செடி கொடிகள்.

இப்படி ஒரு இளைய சமுதாயத்தை தன் சுயநலத்திற்காக மடை மாற்றிக் கொண்ட உங்களிடம் கேட்கிற இந்த பணம், யாசகம் அல்ல. நஷ்ட ஈடு! கவுன்சிலரையும், அமைச்சரையும், கேள்வி கேட்க ஐந்து வருஷத்துக்கொரு முறை தேர்தல் வருகிறது. உங்களை போன்ற ஹீரோக்களிடம் கேட்பதற்கு எப்போதாவது இப்படி ஒரு வெள்ளமோ சுனாமியோதானே வருகிறது? அதுவும் இல்லை என்றால் யார் கேட்கப் போகிறார்கள் உங்களை?

இவ்வளவு கொடூரத்திலும் ஒரு ஆறுதல்! ரசிகர்களின் பலமே இல்லாத ஏராளமான நடிகர்கள் எவ்வித சுயநலமும் இன்றி செய்த உதவிகள்தான். சில லட்சங்களோ, சில கோடிகளோ வாங்கும் அவர்கள் கேட்காமலே முன் வந்து செய்த உதவிகளை மக்கள் மறக்கப் போவதில்லை. இந்த வெள்ளம் உங்கள் நால்வரையும் மக்களிடம் அடையாளம் காட்டிவிட்டது.

சொல்ல முடியாது. பெருமாள் கோவில் உண்டியலை உடைச்சு, பிள்ளையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பண்ணியதை போல, உங்களுக்காக கொட்டிய பாலை, இனி சித்தார்த், மயில்சாமி தலையில் கொட்டக் கிளம்புவார்கள் ரசிகர்கள்.

அப்படியொரு அதிசயம் நடக்கும்போது எங்கள் கிராமத்து இளைஞர்கள் மண்வெட்டியோடு கிளம்புவார்கள். ஆறு குளங்களில் மட்டுமல்ல, அவர்கள் மனங்களிலும் அப்போது தூர் இருக்காது!

(ஆர்.எஸ்.அந்தணன் எழுதி தின செய்தி நாளிதழில் வெளிவந்த கட்டுரை)

இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் எழுத்தாளரையே சேரும் இந்தியா கிளிடஸ் நிறுவனம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment