அரசு பள்ளியை ரயிலாக மாற்றிய ரஜினி ரசிகர்கள்!
- IndiaGlitz, [Friday,March 06 2020]
தனியார் பள்ளிகள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகள் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அரசு பள்ளிகளின் சுவர்களில் வண்ணவண்ண ஓவியம் வரையும் திட்டம் சமீபத்தில் கேரளாவில் நடந்தது.
இந்த நிலையில் கேரளாவில் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் சுவர்களில் ஓவியம் வரையும் பணியில் ரஜினி மக்கள் மன்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அருகே ஒரு மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ரயில் போல் பள்ளியின் சுவர்களில் ஓவியம் தீட்டி உள்ளனர். இந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இது குறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் கூறியதாவது: எங்களது மன்றத்தின் மூலம் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகள், கிராமங்களில் பணிகளைச் செய்ய நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். ஏழை-எளிய மக்கள், மாணவர்களுக்கு தேவையான உதவியைச் செய்வதில் முன்னுரிமை அளிக்க கூறியுள்ளார். அதன்படி குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ரயில் போன்ற ஓவியத்தை சுவரில் வரைய முடிவு செய்து அனுமதி பெற்றோம். அந்த ஓவியம் மட்டுமன்றி ஊனமுற்ற குழந்தைகளுக்கு நலஉதவிகள் என மொத்தம் ரூ. 73 ஆயிரம் மதிப்பில் பணிகளை செய்துள்ளோம் என்றார்.