ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]
சமீபத்தில் தனுஷ் ஒரு மிகப்பெரிய செய்தியை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிப்பதில் பெருமை அடைகிறேன் என்று அவர் டுவிட்டரில் தட்டிவிட்டதும் கோலிவுட்டே இன்ப அதிர்ச்சியில் அதிர்ந்தது. இந்த படம் 'கபாலி 2' இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன இருக்கும் என்பதை பார்ப்போம்.
1. 'கபாலி' படத்தின் மிகப்பெரிய பலம், ரஜினி தன் வயதுக்கேற்ற கேரக்டரை தேர்வு செய்தது. வயதான டான், அதே நேரத்தில் கம்பீரமான டான் என்பது ரஜினிக்கு மிகச்சரியாக செட் ஆனது. எனவே மீண்டும் அவர் வயதுக்கேற்ற கேரக்டரை ரஞ்சித் தனது கதையில் அமைக்க வேண்டும்

2. 'கபாலி' படத்தில் பல விமர்சனங்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு குறை, படத்தின் திரைக்கதை மெதுவாக சென்றது என்பதுதான். முதல் கால் மணி நேரம் விறுவிறுப்பாக இருந்த திரைக்கதை பின்னர் மெதுவாக நகர்ந்தது. குறிப்பாக மனைவியை ரஜினி தேடும் காட்சிகள் செண்டிமெண்டாக இருந்தாலும் படத்தின் வேகத்தை குறைத்ததாக விமர்சனம் செய்யப்பட்டது. இதை அடுத்த படத்தில் ரஞ்சித் தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் 'கபாலி'யில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அற்புதமாக அமைந்தது. இருப்பினும் 'நெருப்புடா' பாடல் தவிர மற்ற பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த படத்திலும் அனேகமாக சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பாளராக இருப்பார். இதில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் வகையில் அவர் கம்போஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.'கபாலி' படத்தின் மிகப்பெரிய குறையாக கண்டறியப்பட்டது வலிமை இல்லாத வில்லன் கேரக்டர். சீன வில்லனும், நம்மூர் கிஷோரும் அவ்வப்போது உதார் காட்டினார்களே தவிர ரஜினியுடன் ஆக்ரோஷமாக வசனங்களிலோ அல்லது ஆக்சன் காட்சிகளிலோ மோதிய காட்சிகள் இல்லை. 'தெறி' படத்தில் மகேந்திரன் கேரக்டர் போல ஒரு ஸ்ட்ராங்கான வில்லன் வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் விரும்புகின்றனர்.
5.'கபாலி' படத்தில் வெறும் டீசரை மட்டுமே வெளியிட்டு ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு காரணமான படக்குழுவினர், இந்த படத்திலாவது டீசர், டிரைலர் என இரண்டையும் வெளியிட வேண்டும் என்பதே கோடானு கோடி ரஜினி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.