கருணாநிதிக்காக கூடும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Saturday,August 11 2018]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி வயது முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது நினைவிடத்தில் தொடரந்து நான்கு நாட்களாக திமுக தொண்டர்களும் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகத்தினர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஆகஸ்டு 13ம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரையுலகத்தினர் சார்பில் நடத்தப்படும் இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும், நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.