கொரோனாவால் பாதிப்பு அடைந்த ரஜினி, அஜித், சிம்பு படங்கள்!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடந்த சில நாட்களாக ஆட்டுவித்து வருகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் 2 பேர் கொரோனா வைரசால் மரணம் அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 31-ஆம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து என ஒரு சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மார்ச் 31 வரை எந்த படப்பிடிப்பும் நடைபெறாது என கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’, அஜீத் நடித்து வரும் ’வலிமை’ மற்றும் சிம்பு நடித்து வரும் ’மாநாடு’ படங்களின் படப்பிடிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறடு. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப்போகும் என தெரிகிறது. கொரோனா வைரஸ் காரணமாக விரைவில் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும் என்று கூறப்படுவதாலும், விநியோகஸ்தர் சங்கத்தின் சார்பில் வரும் 27-ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், விஜய்யின் மாஸ்டர் உட்பட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.