இந்த மூணும் செஞ்சவங்க 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

மது, சிகரெட், அசைவம் ஆகிய மூன்றையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்ததாக எனக்கு தெரிந்தவரை சரித்திரமே இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஒய்ஜி மகேந்திரன் நடித்த ’சாருகேசி’ திரைப்பட அறிமுக விழா நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய போது, ‘இது ஒரு குடும்ப விழா என்பதற்காக நான் இன்னொரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். நான் இந்த வயதில் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்னுடைய மனைவி லதா தான்.

நான் பெங்களூரில் கண்டக்டராக இருந்தபோது எனக்கு ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் இருந்தது. கெட்ட சகவாசத்தால் கெட்ட பழக்கங்கள் எனக்கு தானாகவே வந்தது. கண்டக்டராக இருந்தபோது நான் தினமும் மது அருந்துவேன், பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் குடிப்பேன், எத்தனை பாக்கெட்டு சிகரெட் அடிப்பேன் என்று எனக்கே தெரியாது. அதேபோல் அசைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன். கண்டக்டராக இருந்தபோதே நான் இப்படி என்றால் பணம் புகழ வந்த பிறகு நான் எப்படி இருந்திருப்பேன் என்று நினைத்து பாருங்கள். காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 தான் சாப்பிடுவேன், வெஜிடேரியன் சாப்பிடுபவர்களை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும், என்னடா இது இதையெல்லாம் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று நான் நினைப்பேன்.

மது, சிகரெட் மற்றும் அசைவம் ஆகிய மூன்றும் மிகவும் கொடுமையான காம்பினேஷன். இந்த மூன்றையும் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பல வருடங்கள் சாப்பிட்டவர்கள் யாருமே எனக்கு தெரிந்து 60 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை. அதற்குள்ளே அவர்கள் இறந்து விடுவார்கள், ஒருவேளை 60 வயதுக்கு மேல் அவர்கள் இருந்தாலும் படுத்த படுக்கையாக தான் இருப்பார்கள். இதற்கு நிறைய பேரை உதாரணம் சொல்லலாம்.

அந்த மாதிரி இருந்த என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா. இந்த மாதிரி கெட்ட பழக்கம் இருப்பவர்கள் சொன்னால் யாரும் விட மாட்டார்கள், ஆனால் இன்று நான் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எனது மனைவி லதா என்னை அன்பால் மாற்றியதுதான் காரணம். அதற்காக நான் அவர்களுக்கு நன்றியை கூறி கொள்கிறேன்’ என்று ரஜினி பேசினார்.