பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை! ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
- IndiaGlitz, [Wednesday,May 31 2017]
இறைச்சிகாக மாடுகள் உட்பட ஒருசில கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது என மத்திய அரசு சமீபத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அமைதியாக இருந்தாலும் கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், புதுச்சேரி, திரிபுரா உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்று கேரள முதல்வரும், புதுவை முதல்வரும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடையும் விதித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த ஒரு வழக்கு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த ராஜஸ்தான் நீதிமன்றம், 'பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தான் நீதிமன்றத்தின் இந்த கருத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கன்று, பசு, காளை ஆகிய கால்நடைகளை வெட்டுவதற்கும் கறியை விற்பனைக்காக எடுத்துச் செல்வதற்கும் ஏற்கனவே தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தின் சட்டப்படி பசுவை கொன்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் வழக்கமும் உள்ளது. இந்த நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை என்ற ராஜஸ்தான் நீதிமன்றத்தின் பரிந்துரை அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.