மணமகனுக்கு கொரோனா: திருமணம் நடத்திய குடும்பத்தினர்களுக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்
- IndiaGlitz, [Sunday,June 28 2020]
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து இந்த திருமணத்திற்கு அளவுக்கு அதிகமான நபர்களை அழைப்பு விடுத்த குடும்பத்திற்கு 6.26 லட்சம் அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தில் 50 பேருக்கு அழைப்பு விடுக்கலாம் என அம்மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால் 250 பேர் வைரை இந்த குடும்பத்தினர் திருமணத்திற்கு அழைப்பு விடுத்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் திருமணத்திற்கு வந்தவர்களில் பலர் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாகவும், சானிடைசர் உட்பட எந்த வித பாதுகாப்பு முறைகளும் இந்த திருமணத்தில் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் மணமகன் உள்பட 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் கொரோனா வைரஸ் தடுப்பு சட்டத்தை மீறி 250 பேருக்கு அந்த குடும்பம் அழைப்பு விடுத்ததாக தெரியவந்தது. இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு 6.26 லட்சம் அபராதம் விதிப்பதாகவும், அபராதத்தை மூன்றே நாட்களில் கட்ட வேண்டும் என்றும் இந்த அபராதத் தொகையை கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது.