தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா ? தொடரும் விவாதம்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தப் பட்டு வருகிறது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற இருப்பதாக கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் குடமுழுக்கு விழா சடங்கினைத் தமிழில் நடத்த வேண்டும் என சைவ மத அமைப்பு, பெரிய கோவில் உரிமை மீட்பு குழு போன்ற பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழில் குடமுழுக்கு நடத்துவது பற்றி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஜனவரி 22 ஆம் தேதியன்று தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சையில் மாநாடு ஒன்றும் நடத்தப் பட்டது.

ஆகம விதிகள்

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்கள் அனைத்தும் ஆகம விதிகளைப் பின்பற்றியே கட்டப் பட்டிருக்கின்றன. இந்தக் கோவில்களில் ஆகம விதிகளைப் பின்பற்றியே குடமுழுக்கு விழாக்களும் நடத்தப் பட்டு வருகின்றன. சைவ (சிவன்) சமயத்திற்கு என்று 28 ஆகமங்களும் வைணவச் (திருமால்) சமயத்திற்கு என்று 2 ஆகமங்களும் இருக்கிறது. தற்போது சிவத் தலங்களுக்கு பின்பற்றப் படும் ஆகமங்களில் காரணாகமம், காமியாகமம் என்ற இரண்டு ஆகமங்கள் மட்டுமே முழுமையாக கிடைக்கின்றன. மற்ற ஆகமங்கள் தொலைந்து விட்ட நிலையில் இந்த இரண்டு ஆகமங்களைப் பின்பற்றியே தமிழகத்தில் சைவ கோவில்களுக்கு குடமுழுக்குச் சடங்குகள் நடத்தப் படுகின்றன.

2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அதோடு தமிழில் வழிபாடு நடத்தப் படலாம் என்ற தீர்ப்பினை அளித்திருப்பதால் குடமுழுக்கும் தமிழில் நடத்தப் பட வேண்டும் எனத் தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தக் கோரிக்கையினை கோயில் நிர்வாகம் நிராகரித்து, ஆகம முறைப்படியே குடமுழுக்கு நடைபெறும் எனப் பதில் தெரிவித்துள்ளது.

தமிழில் குடமுழுக்கு

பெரிய கோவில் உரிமை மீட்பு குழு தலைவர் பெ. மணியரசன் “தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப் படுவதே சிறந்தது, தமிழ் சிவநெறியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். வழக்கில் இல்லாத ஒரு மொழியில் (சமஸ்கிருதம்) குடமுழுக்கு நடத்தப் படுவது எப்படி சரியாக இருக்கு முடியும். வேத வழிபாட்டில் குடமுழுக்கு பற்றிய செய்திகள் கிடையாது. ஆனால் தமிழில் உள்ள தொல்காப்பியத்தில் மந்திரம், நீர்ப்படை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

ராஜராஜ சோழனுக்கு திருமுறை கண்டான் என்ற பெயரும் உண்டு. அனைத்துத் திருமுறைகளையும் ஒன்றாகச் சேர்த்து கோவிலுக்கு கொண்டு வந்ததோடு 48 ஓதுவார்களையும், 2 மத்தளம் கொட்டுபவர்களையும் நிவந்தங்கள் கொடுத்து அமர்த்தினார். ராஜராஜ சோழனுக்கு தமிழ் மீது அதிக பற்று இருப்பதாலேயே இத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார். அதோடு தமிழகத்தில் முதல் முறையாக 63 நாயன்மார்களுக்குச் சிலைகளை வைத்துள்ளார். இவை அனைத்தும் தமிழ் மீது கொண்டிருந்த பக்தியையே காட்டுகின்றன. சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்தப் படுவது ஒரு மொழிக்கான உரிமை பறிப்பாகும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆகம முறை

ஆகம பற்றாளர்கள் தரப்பில் ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு ஆகம விதிமுறைகளின் படியே கட்டப் பட்டிருக்கின்றன. தொடர்ந்து அந்த ஆகம விதிகளைப் பின்பற்றியே குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலம் காலமாக பெரியவர்களால் பின்பற்றப் படும் முறைகளை மீறக் கூடாது என ஆகம அறிஞர்களிடமிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள கோவில் கட்டடிடங்களைத் தமிழகத் தொல்லியத் துறையினராலும், கோவில்களில் நிகழ்த்தப் படுகின்ற சடங்கு, வழிபாட்டு முறைகளை இந்து சமய அறநிலையத் துறையினராலும் கண்காணிக்கப் பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் அனைத்துக் கோவில்களிலும் இதுவரை சமஸ்கிருத மொழியில்தான் குடமுழுக்கு நடத்தப் பட்டு வருகின்றன. தற்போது தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

1954 இல் குன்றகுடி அடிகளார் கோவையில் உள்ள கணபதி நகரில் ஒரு கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தியுள்ளார். தற்போது கோவை பேரூர் ஆதீனம், தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் இந்த நடைமுறையைப் பரவலாக்கி உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு உட்படாத தனியார் கோவில்களில் தேவாரங்களை ஓதி குடமுழுக்கினை நடத்தி வருகிறது.

இந்தத் தேவாரம் திருவாச நூல்களைக் குறித்தும் தற்போது சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. தேவாரம், திருவாசகம் இரண்டும் இறைவனை வழிபடுவதற்காக பாடப்பட்டவை. அவை வழிபாட்டு சடங்குகளில் முக்கியத்துவம் இல்லாதவை என்றும் கருத்துத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது வரை தஞ்சை பெரிய கோவில் தமிழ் முறையில் குடமுழுக்கு நடத்தப் பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண முடியவில்லை. கோவிலின் கல்வெட்டுக்கள், கோவில் செப்பேடுகள் போன்றவற்றிலும் அதற்கான எந்த மேற்கோள்களும் சான்றுகளும் காணப்பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் அமைச்சர்கள் தமிழில் குடமுழுக்கு நடத்தப் படுவதைக் குறித்து மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்ற நிலையில் தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கட்சியினர், பல அமைப்புகள் போன்ற நிலையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு ஒரு நல்ல தீர்வினைக் காண வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழில் குடமுழுக்கு நடத்தப் பட வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More News

நடிகர் சங்க தேர்தல் ரத்து: விஷால் எடுத்த அதிரடி முடிவு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது என்றும் அந்தத் தேர்தலுக்கு பதிலாக புதிய தேர்தல் இன்னும் மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும்

ஜெயம் ரவிக்கு அக்காவாக நடிக்கின்றாரா த்ரிஷா? பரபரப்பு தகவல்!

உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்' என்ற திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை திரிஷா. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவிக்கு அக்காவாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு

தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது கல்லூரி  மாணவி ஒருவர் கனடாவில் படித்துக்கொண்டிருந்தபோது அவரை மர்ம மனிதன் ஒருவன் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபுதேவாவின் 'பொன்மாணிக்கவேல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபுதேவா நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கிய 'பொன்மாணிக்கவேல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே

நடிகர் சங்க தேர்தல் குறித்த பரபரப்பு தீர்ப்பு: 

நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.