சஸ்பென்ஸ் த்ரில்லர்
போலிஸ் கான்ஸ்டபிள் சிரிஷ் (ராஜா), தற்செயலாக பார்க்கும் சாந்தினியை (ரங்குஸ்கி) கண்டதும் காதல் கொள்கிறார். சாந்தினி தன்னை காதலிக்க ஒரு திட்டத்தை தீட்டுகிறார் சிரிஷ். அந்த திட்டம் வெற்றி பெற்று சாந்தினி சிரிஷை காதலிக்க தொடங்கிவிட்டாலும், அதே திட்டத்தை மர்ம நபர் ஒருவர் தொடர்வதால் சிரிஷூக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாந்தினி வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் அனுபமாவை அதே மர்ம நபர் கொலை செய்துவிட்டு, அந்த கொலையை சிரிஷ் செய்தது போல் செட்டப் செய்கிறார். இந்த கொலை வழக்கை முதலில் காவல்துறையும் பின்னர் சிபிசிஐடியும் விசாரணை செய்ய, கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் சிரிஷையே கொலையாளி என காட்டுகிறது. காவல்துறையிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும், உண்மையான கொலையாளியையும் கண்டுபிடிக்க வேண்டும், மர்ம நபரிடம் இருந்து காதலி சாந்தினியையும் காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருந்து சிரிஷ் மீண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு ஆண்டும் பல ஹீரோக்கள் அறிமுகம் ஆகின்றனர். ஆனால் அதில் ஒருசிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில் 'மெட்ரோ' படத்தின் மூலம் மக்களை கவர்ந்த சிரிஷ், இந்த படத்தின் மூலம் ரசிகர்களை திருப்தி செய்ய முயன்றுள்ளார். ஆனால் ஒரு ஹீரோவுக்கு உண்டான தகுதியை அவர் இன்னும் வளர்த்து கொள்ள வேண்டும். காதல், ஆத்திரம், ஆக்சன் என அனைத்திற்கும் ஒரே மாதிரியான முகபாவத்தில் தான் உள்ளார். வசன உச்சரிப்பிலும் அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் வலிமையாக உருவாக்கப்பட்டுள்ளதால் நடிப்பில் உள்ள குறை அவ்வளவாக தெரியவில்லை
ஏற்கனவே தமிழ், தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் சாந்தினிக்கு கொஞ்சம் வெயிட்டான கேரக்டர்தான். இந்த கதையே அவருடைய கேரக்டரை சுற்றித்தான் பின்னப்பட்டிருப்பதால் அவருடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சாந்தினியின் நடிப்பு இந்த கேரக்டருக்கு ஓகே என்றாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக இவரிடம் நடிப்பை இயக்குனர் வாங்கியிருக்கலாம்
சிரிஷ் நண்பராக நடித்திருக்கும் கல்லூரி வினோத், சிபிசிஐடி அதிகாரி ஜெயகுமார் ஜானகிராமன், அனுபமா குமார் உள்பட இந்த படத்தின் கேரக்டர்கள் அனைவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்
படத்தின் மிகப்பெரிய பலம் யுவன்ஷங்கர்ராஜாவின் பின்னணி இசை. ஒரு த்ரில் படத்திற்கு தேவையான, அதே நேரத்தில் ஒரு பெரிய ஸ்டார் நடிகரின் படத்திற்கு இணையான பின்னணி இசை இந்த படத்தில் யுவன் வழங்கியுள்ளார். படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் ஓகே என்றாலும் இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்பதே நமது கருத்து. யுவா கேமிரா மற்றும் முகம்மது அலியின் படத்தொகுப்பு கச்சிதம்.
இயக்குனர் தரணிதரன் ஒரு சூப்பரான த்ரில்லர் படத்தை கொடுத்ததில் நிச்சயம் வெற்றி கண்டுள்ளார் என்றே கூற வேண்டும். படத்தின் மிகப்பெரிய பிளஸ், கொலையாளி யார் என்பதை கடைசி ரீல் வரை யாராலும் ஊகிக்க முடியாமல் திரைக்கதையை நகர்த்தியதுதான். எழுத்தாளர் சுஜாதாவை அடிக்கடி கோடிட்டு காட்டிய இயக்குனர், அவருடைய நாவல் போலவே சஸ்பென்ஸுடன் கதையை நகர்த்தி சென்றது அருமை. ஆனால் அதே நேரத்தில் போலீஸ் மற்றும் சிபிசிஐடியினர் செய்யும் விசாரணை குழந்தைத்தனமாக உள்ளது. ஒரு கான்ஸ்டபிள் கூட இதைவிட அதிக புத்திசாலித்துடன் ஒரு கொலை வழக்கை விசாரணை செய்வார். சிரிஷும் ஒரு போலீஸ் என்பதால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை காதில் வாங்காமல் அவரே கொலையாளி என்ற கோணத்தில் மட்டுமே சிபிசிஐடி அதிகாரி யோசிப்பதாக காண்பித்திருப்பது திரைக்கதையின் வீக். இருப்பினும் இறுதியில் கொலையாளி யார் என்பதை கூறுவதோடு அவர் எதற்காக இந்த கொலையை செய்தார் என்பதற்கு சரியான காரணத்தையும் கூறி ஒருசில திடீர் கேரக்டரை அறிமுகம் செய்து படத்தின் குறைகளை மறக்கடிக்க செய்துவிடுகிறார் இயக்குனர்.
மொத்தத்தில் ஒரு சின்ன பட்ஜெட்டில் அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். த்ரில் திரைக்கதையை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.
Comments