திமுகவில் இணையும் முன்னாள் அதிமுக அமைச்சர்

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராஜ கண்ணப்பன் சந்திக்கவுள்ளதாகவும், அதனையடுத்து அவர் திமுகவில் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து ராஜ கண்ணப்பன் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிவகெங்கை தொகுதியில் செல்வாக்குள்ள ராஜகண்ணப்பன் கடந்த 2000ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி 'மக்கள் தமிழ் தேசம்' என்ற கட்சியை ஆரம்பித்தார். பின் 2006ஆம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தார். பின்னர் மீண்டும் 2009ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் திமுகவில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.