நானும் ரவுடிதான்… வடிவேலு பாணியில் ஜெயிலுக்கு போகனுமா? அட்டகாசமான ஆஃபர்!

  • IndiaGlitz, [Friday,August 20 2021]

கடந்த 2006 ஆம் ஆண்டு சுந்தர்.சி நடிப்பில் வெளியான “தலைநகரம்” திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, நானும் ரவுடிதான் என்று சொல்லிக்கொண்டு ஜெயிலுக்குப் போக ஆசைப்படுவார். உண்மையில் இப்படி எந்தக் குற்றமும் செய்யாமல் நீதிமன்றத்தின் படிகளில் நிற்காமல் ஜெயில் கம்பியை எண்ணுவதற்கு கர்நாடகச் சிறைத்துறை ஒரு அட்டகாசமான ஆஃபரை கொண்டுவந்துள்ளது.

இதன்படி ரூ.500 செலுத்திவிட்டால் போதுமானது. பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் நீங்கள் ஒருநாள் சிறை கைதியாக இருக்க முடியும். அதோடு மற்ற சிறை கைதிகளைப் போலவே உங்களுக்கு சீருடை, சாப்பாடு போன்றவற்றையும் கொடுப்பார்கள். மற்ற கைதிகள்  தோட்டவேலை, சமையல் வேலைகளைச் செய்வது போலவே நீங்களும் ஒருநாள் சிறை வாழ்க்கையை அனுபவிக்கலாம். மேலும் மற்ற கைதிகள் தரையில் படுத்துத் தூங்குவதைப் போலவே நீங்களும் சிறைக்குள் தூங்கி புது அனுபவத்தைப் பெறலாம்.

 இதுகுறித்து, சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “கைதியின் வாழ்வில் ஒருநாள்“ எனும் இந்தப் புது திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக சிறை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த அனுபவத்தின் மூலம் குற்றங்கள் குறையும் என்று நம்புவதாகவும்  அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பெலகாவியில் இந்த ஹிண்டல்கா சிறையில் 500க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரூ.500 செலுத்தி ஒருநாள் சிறையில் தங்கும் புது திட்டத்திற்கு கர்நாடக அரசாங்கம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.