கையில் எப்போதும் குடை வைத்திருங்கள்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவுரை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17-ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை குறித்த விவரங்களை அப்போது தனது முகநூலில் தெரிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் தற்போது சென்னை முதல் தூத்துக்குடி வரை வரிசையாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் அதனால் வீட்டை விட்டு வெளியில் செல்பவர்கள் எப்போதும் கையில் கூடையை வைத்து இருங்கள் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்களிலும் கடலூரில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் கன மழையும் பெய்துள்ளதால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.