ரயில் கழிவறை நீரை டீயில் கலந்த விவகாரம்: ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Friday,May 04 2018]
ரயில் கழிப்பறையில் உள்ள தண்ணீரை தேநீர் தயாரிக்க எடுத்த டீ விற்பனையாளர் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சியைக் கண்ட ரயில் பயணி ஒருவர், எதற்காக கழிவறை நீரை தேநீர் கேனில் பிடித்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எந்த தவறும் நாங்கள் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அவர்கள் நகர்ந்து சென்றதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த விசாரணைக்கு ரயில்வே துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி நடந்த விசாரணையில் கழிவறை நீரை தேநீர் கேனில் பிடித்துச் சென்ற இரண்டு ஊழியர்களும், காசிப்பேட் பி. சிவபிரசாத் என்ற ஒப்பந்ததாரிடம் பணியாற்றும் ஊழியர்கள் என்பது உறுதியானது. இதனையடுத்து உணவுகளை சுகாதாரக்கேட்டுடன் தயாரித்த ஒப்பந்ததாரர் சிவபிரசாத் என்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் கலந்த அந்த இரண்டு ஊழியர்களும், நிரந்தரஊழியர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அங்கீகாரமற்ற வகையில், செகந்திராபாத் ரயில்நிலையத்தில், விற்பனையில் ஈடுபட்டு இருந்த பலர் நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.