தமிழக தலைமைச்செயலளார் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

  • IndiaGlitz, [Wednesday,December 21 2016]

தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவ் வசித்து வரும் அண்ணா நகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா குடும்பத்தினர்களுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் ராம்மோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தப்படுவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள் சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, 131 கோடி ரூபாய் ரொக்கமும், 177 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதில் 34 கோடி ரூபாய் புதிய ரூ.2000 நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருசில நபர்களுக்கு மட்டும் 34 கோடி ரூபாய் புது நோட்டுகள் எப்படி வந்தது என்பது குறித்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வங்கி அதிகாரிகளுக்கு மட்டுமின்றி தலைமைச்செயலளாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவருடைய வீட்டில் சோதனை நடக்கின்றது என்றால் கண்டிப்பாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் இந்த சோதனை நடக்காது என்றே கருதப்படுகிறது. ஒருவேளை இந்த சோதனையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதுமட்டுமின்றி பணியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் என்றும் தலைமைச்செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.