தலைமை வீட்டை அடுத்து மேலும் ஒரு முக்கிய ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை
- IndiaGlitz, [Thursday,December 22 2016]
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டிலும் அவருடைய மகன் மற்றும் உறவினர் வீடுகளிலும், தலைமைச்செயலக அலுவலகத்திலும் நேற்று அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தலைமைச்செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திய மறுநாளே அதாவது இன்று காலை மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியான தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கின் நிறுவன மேலாண் இயக்குநர் நாகராஜன் வீட்டில் வருமானவரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது, 6 கிலோ தங்கம், 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான ஆவணங்களும் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றன. அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு முக்கிய அதிகாரிகளின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வீட்டில் இன்று நடைபெற்று வரும் வருமானவரி சோதனைக்கும், சேகர் ரெட்டி மற்றும் ராம்மோகன் ராவ் வீடுகளில் நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பில்லை என்றும், ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.