வதந்தியை நம்பி மூக்கில் எலுமிச்சை சாறு செலுத்திய ஆசிரியர் பரிதாப பலி!
- IndiaGlitz, [Friday,April 30 2021]
மூக்கு வழியே எலுமிச்சைசாறு செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகம் கிடைக்கும் என்ற வதந்தியை நம்பி ஆசிரியர் ஒருவர் மூக்கு வழியே எலுமிச்சைசாறு செலுத்தியதால் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பது எப்படி? என்பது குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று மூக்கு வழியே எலுமிச்சை சாறை செலுத்தினால் உடலுக்கு ஆக்ஸிஜன் அளவு அதிகம் கிடைக்கும் என்று ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது. இந்த வதந்தியை நம்பி கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் என்ற பகுதியை சேர்ந்த பசவராஜா என்ற ஆசிரியர் தனது மூக்கின் வழியே எலுமிச்சைச்சாற்றை செலுத்தியுள்ளார். இதனையடுத்து அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மருத்துவர்கள் கூறுவதை தவிர சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்பி இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என ஏற்கனவே பலர் அறிவுறுத்தியும் படித்த ஆசிரியர் ஒருவரே வதந்தியை நம்பி தனது மூக்கில் எலுமிச்சைசாறு செலுத்தி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.