அப்படி போடு: மெர்சலுக்கு ராகுல்காந்தியும் ஆதரவு

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

ஜிஎஸ்டி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் போட்டு விளக்கினர். ஆனால் நூறு கூட்டங்களில் வராத விழிப்புணர்வு ஒரே ஒரு படத்தில் ஏற்பட்டுவிட்டது என்றால் அதுதான் 'மெர்சல்' திரைப்படம். எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு கூட பயப்படாத பாஜக, விஜய்யின் மெர்சலுக்கு பதறியடித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இதுவரை தமிழக தலைவர்கள் மட்டுமே கருத்துமோதல் கொண்டிருந்த இந்த பிரச்சனை தற்போது தேசிய தலைவர்களையும் தொற்றிக்கொண்டது.

ஆம், மெர்சல் படத்திற்கு அகில  இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சற்றுமுன்னர் ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி அவர்களே! 'மெர்சல்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்க செய்ய வேண்டாம் என்றும், திரைப்படம் என்பது தமிழ் மொழி கலாச்சாரத்தின் ஆழமாக வெளிப்பாடு' என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார். 

நேற்றே இந்த பிரச்சனை தேசிய ஊடகங்களில் விவாதத்திற்கு வந்துவிட்ட நிலையில் இன்று இந்த பிரச்சனை குறித்து தேசிய தலைவர்களும் பேசிவிட்டனர். அடுத்ததாக பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் எப்போது இதுகுறித்து பேசுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்