காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல்காந்தி: அதிகாரபூர்வ அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,December 11 2017]
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என அதிகாரபூர்வமாக அக்கட்சியின் தேர்தல் அதிகாரி முள்ளிப்பள்ளி ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராகுல்காந்தியை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் அவர் ஒருமனதாக போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர்ம் 16ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்கவுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராகவும், நேரு குடும்பத்தின் 6வது தலைவராகவும் ராகுல்காந்தி பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு முன்னர் நேரு குடும்பத்தை சேர்ந்த மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி ஆகியோர் காங்கிரஸ் தலைவராக பதவியில் இருந்துள்ளனர்.
கடந்த 17 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி உடல்நலம் காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததை அடுத்து புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.