மீடியாக்களுக்கு ராகவா லாரன்ஸின் பணிவான வேண்டுகோள்
- IndiaGlitz, [Friday,January 27 2017]
சென்னை மெரீனாவில் வரலாற்றில் இடம் பிடிக்கும் அளவுக்கு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை பார்த்து உலகமே வியந்தது. கடைசி நாளில் ஒருசில வன்முறையுடன் இந்த போராட்டம் முடிந்தாலும், மாணவர்களின் எழுச்சி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் பெரும் ஆதரவை கொடுத்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அதே நேரத்தில் இந்த போராட்டத்தின் வெற்றியில் அவர் துளியும் பங்கெடுத்து கொள்ள விரும்பவில்லை. முழுக்க முழுக்க இது மாணவர்களின் வெற்றி என்றே கூறி வருகிறார். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து விவாதிக்க பல மீடியாக்கள் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அத்தகைய மீடியாக்களுக்கு தனது விளக்கத்தை கடிதம் ஒன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி, இணையதள, பண்பலை நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு எப்போதும் பக்கபலமாக இருந்து ஊக்கமும், உற்சாகமும் அளித்து வரும் உங்களுக்கு என்றென்றும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
மெரீனாவில் மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழ் சமுதாயம் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
வயது, ஜாதி, மதம் என எல்லாவற்றையும் கடந்து தான் அந்த வெற்றியை மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
சில பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், இணையதளம், பண்பலை மற்றும் ஊடக நண்பர்கள் அந்த வெற்றி சம்மந்தமாக பேட்டி, நேர்காணல், விவாத நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள். இந்த வெற்றி முழுவதும் மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்ந்தது. தயவு செய்து மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழையுங்கள். அவர்களோடு நானும் ஒருவனாகக் கலந்து கொள்கிறேன். என்னை மட்டும் அழைப்பது நியாயமாக இருக்காது என்பதை நான் பணிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் மீடியாக்களிடம் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.