திருநங்கைகளுக்காக ராகவா லாரன்ஸ் செய்யவுள்ள உதவிகள்

  • IndiaGlitz, [Saturday,April 01 2017]

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளரான ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டுமின்றி பல சமூக சேவைகள் செய்து வருகிறார். இவரது உதவியால் கல்வி பயிலும் மாணவர்களும், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களும் ஏராளம்

இந்த நிலையில் மூன்றாவது பாலினமான திருநங்கைகளுக்கு ஒருசில உதவிகளை செய்யவிருப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். நேற்று நெல்லையில் சர்வதேச திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் கூறியதாவது:

என்னுடைய முதல் நண்பரான என் அம்மாவின் வழிகாட்டுதலின்படி திருநங்கைகளுக்காக நான் 'காஞ்சனா' படத்தில் நடித்தேன். திருநங்கைகளாக பிறப்பது சாபம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், அது தவறு. திருநங்கைகளும் நம்மை போன்றவர்கள் தான். ஒரு திருநங்கையை மற்றொரு திருநங்கை தத்தெடுப்பது பாராட்டுக்குரியது.

டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் குழந்தை பிறந்தோலோ, வீட்டிற்கு கிரகபிரவேசம் செய்தாலோ, எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி என்றாலும் திருநங்கைகளை அழைத்து தான் விளக்கேற்றி வைக்கச் சொல்வார்கள். அந்த ஒரு நிலை தமிழகத்திற்கு வரவேண்டும்.

இவர்களுக்காக, படங்களின் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமித்து வங்கி கணக்கு தொடங்கி சேமித்த பணத்தை அதில் போட்டு வைப்பேன். அதனை திருநங்கைகளின் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்துவேன். மேலும், அவர்களுக்கு ஒரு கட்டிடம் கட்டிக்கொடுப்பேன்

இவ்வாறு ராகவா லாரன்ஸ் பேசினார்