சமூக சேவைக்காக ‘டாக்டர்’ பட்டம் பெற்ற தமிழ் திரையுலக பிரபலம்: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Monday,July 11 2022]

தமிழ் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் திரை உலகில் சாதனை செய்ததற்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. ஆனால் தமிழ் திரையுலக பிரபலம் ஒருவர் சமூக சேவை செய்ததற்காக டாக்டர் பட்டம் பெற்று உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகின் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் பல அவதாரங்களில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் ’முனி’ ’காஞ்சனா’ உட்பட பல வெற்றி படங்களை நடித்து இயக்கி உள்ளார் என்பதும் ஏராளமான படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலக பிரபலமாக இருந்தாலும் சமூக சேவை செய்வதில் மிகப்பெரிய அளவில் ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் தமிழக அரசுக்கு மிக அதிகமாக நன்கொடை அளித்துள்ளார் என்பதும், அதுமட்டுமன்றி தனிப்பட்ட முறையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் பல உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்தார் என்ற செய்தி தலைப்பு செய்தியாக வெளிவந்தது. சமீபத்தில் கூட ’ஜெய்பீம்’ படத்தின் உண்மைக்கதை நாயகனான ராசாக்கண்ணுவின்‌ மனைவி பார்வதி அம்மாள்‌ வறுமை இருப்பதை கேள்விப்பட்டு பார்வதி அம்மாவுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.

இந்த நிலையில் ராகவாலாரன்ஸின் சமூக சேவையை பாராட்டி அவருக்கு தற்போது அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கிய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் சார்பாக என் அம்மா இந்த விருதை பெற்றது எனக்கு மேலும் சிறப்பு’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ராகவா லாரன்ஸ்க்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.