விவசாயிகளின் வீட்டுக்கு சென்று ரூ.1 கோடி பணம் கொடுப்பேன். ராகவா லாரன்ஸ்
- IndiaGlitz, [Tuesday,March 07 2017]
தமிழக விவசாயிகளின் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றும் கர்நாடகம் ஒருபுறம், இருக்கும் நீரை வழிமறிக்கும் கேரளா ஒரு புறம், இதெல்லாம் போதாதென்று குடிநீருக்கே கஷ்டப்படும் அளவுக்கு பொய்த்துவிட்ட மழை ஒருபுறம் என்று பல விவசாயிகளை தற்கொலை எண்ணத்திற்கு கொண்டு செல்கிறது.
இந்நிலையில் நலிந்த விவசாயிகளை காப்பாற்ற நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் தற்போது முன்வந்துள்ளார். நாளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று, அவரை வணங்கி வழிப்பட்டவுடன் விவசாயிகளின் துயர் துடைக்கும் பணியை தொடங்க உள்ளதாகவும், இதற்காக ஒருகோடி ரூபாய் ஒதுக்கி நலிந்த விவசாயிகளை கண்டறிந்து அவர்களுடை வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்படும் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
என்னுடைய குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டால் எப்படி நான் அவர் வீடுதேடி சென்று உதவுவேனோ அதேபோல் ஒவ்வொரு விவசாயி குடும்பத்திற்கு நானே நேரடியாக சென்று என் கையால் அவர்களுக்கு இந்த உதவியை செய்து அவர்களுடைய கண்களில் ஏற்படும் சந்தோஷத்தை பார்த்து அனுபவிக்க முடிவு செய்துள்ளேன்
மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கு கொடுத்தால்தான் அது அரசியல், இது என்னுடைய சொந்தப்பணம், என்னுடைய வியர்வையால் வந்த பணம், எனவே இதை அரசியல் என்று கூற வேண்டாம் என்று ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்
லாரன்ஸ் அவர்களின் இந்த உதவி செய்யும் மனப்பான்மையை சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி மற்றும் இயக்குனர் வாசு அவர்கள் பாராட்டியதோடு அவருடைய சேவைக்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை கண்டிப்பாக தருவோம் என்று கூறினர்.