'பாகுபலி' வெற்றியை தொடர்ந்து டிரண்ட் ஆகும் சரித்திர படங்கள்
- IndiaGlitz, [Sunday,May 21 2017]
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக கோலிவுட்டில் மீண்டும் சரித்திர படங்களின் டிரெண்ட் ஆரம்பித்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் பல சரித்திர திரைப்படங்கள் வெளியாகின. அதற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்போதுதான் சரித்திர திரைப்படங்களின் டிரெண்ட் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
'பாகுபலி'யை தொடர்ந்து சுந்தர் சியின் 'சங்கமித்ரா, பிரமாண்டமாக உருவாகவுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சரித்திர படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமெளலியின் உதவி இயக்குனராக இருந்த மகாதேவ் என்பவர் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டு காலத்து கதையம்சம் உள்ள ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகனாக ராகவா லாரன்ஸ் மற்றும் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் கமல்ஹாசனின் 'மருதநாயகன்' படமும் விரைவில் தொடரவுள்ளதாக கூறப்படுவதால் இனிவரும் காலங்களில் அதிக சரித்திர திரைப்படங்களின் தாக்கம் கோலிவுட்டில் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.