ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் சம்பளத்தில் ரூ.3 கோடியை நிதியுதவி செய்த ராகவா லாரன்ஸ்
- IndiaGlitz, [Thursday,April 09 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ‘சந்திரமுகி 2’ படத்தில் தான் நடிக்கவிருப்பதாகவும் அதற்காக கிடைக்கும் சம்பளத்தில் அட்வான்ஸ் பணம் ரூபாய் 3 கோடியை பெற்று கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக வழங்க உள்ளதாகவும் நடிகரும் நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ’அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக ’சந்திரமுகி 2’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ’சந்திரமுகி’ படத்தின் அடுத்த பாகமான இந்த படத்தை பி.வாசு இயக்க உள்ளார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தலைவர் ரஜினியின் அடுத்த படமான ‘சந்திரமுகி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூபாய் மூன்று கோடி அட்வான்ஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்று கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக வழங்க உள்ளேன்
ரூபாய் 50 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூபாய் 50 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும், ரூபாய் 50 லட்சம் பெப்சி அமைப்புக்கும், ரூபாய் 50 லட்சம் நடன இயக்குனர்கள் சங்கத்திற்கும், ரூபாய் 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் மற்றும் ரூபாய் 75 லட்சம் தான் பிறந்து வளர்ந்த பகுதியான ராயபுரம் பகுதியில் இருக்கும் தினக்கூலி பணி செய்யும் ஊழியர்களுக்கும் வழங்க உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்
ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது