போராட்டத்தை கைவிடுவது எப்போது? லாரன்ஸ் முன்னிலையில் மாணவர்கள் தகவல்
- IndiaGlitz, [Monday,January 23 2017]
சென்னை மெரீனாவில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தாலும், ஒருசில மாணவர்கள் கடல் அருகே சென்று போராட்டம் செய்து வருகின்றனர். போலீசார் அவர்களை நெருங்கினால் கடலில் செல்லும் வாய்ப்பு உள்ளது என்பதால் போலீசார் அமைதி காத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கடல் அருகே போராடும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 'ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஒற்றைக் கோரிக்கை. ஆனால் போராட்டத்தில் புகுந்த ஒருசிலர் தேவையற்ற கருத்துகளைப் பேசுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை நீக்கிய முதலமைச்சர், பிரதமருக்கு நன்றி. கோரிக்கை நிறைவேறியதால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அரசின் நடவடிக்கையை அலங்காநல்லூர் மக்கள் ஏற்றுக் கொண்டது போல நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது எனவும் தடியடி நடத்தியதற்காக காவல்துறை மன்னிப்பு கோரவேண்டும் எனவும் போலிசாரிடம் அவர் வலியுறுத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்டக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள், 'ஆளுநர் கையெழுத்திட்ட சட்ட முன்வடிவு நகல் கிடைத்தவுடன் போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளதாகவும், இரண்டு, மூன்று மாதங்களில் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டனர். எனவே இன்னும் சற்று நேரத்தில் ஆளுனர் கையெழுத்திட்ட சட்டமுன்வடிவு நகலை பார்த்தவுடன் மெரீனா போராட்டக்காரர்கள் அமைதியாக வெளியேறிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.