கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியளிக்கும் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Thursday,August 23 2018]

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை, உடைமைகளை, உறவினர்களை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகள் போல் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவுக்கு கோலிவுட் திரையுலகினர் கடந்த சில நாட்களாக தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர், டான்ஸ் மாஸ்டர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ், கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் தன்னை மிகவும் பாதித்ததாகவும், கேரள மக்களின் துயர் துடைக்க தானே களத்தில் இறங்கி மீட்புப்பணி மற்றும் உதவி செய்ய முடிவு செய்ததாகவும், ஆனால் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இது சாத்தியமில்லை என்று அங்குள்ள தனது நண்பர்கள் கூறியதால் மழை நிற்கும் வரை காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது மழை நின்றபோதிலும் எந்த பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அரசுக்கு மட்டுமே தெளிவாக தெரியும் என்பதால் அரசிடாம் ரூ.1 கோடி நிதியளித்துவிட்டு தானும் நேரில் மக்களுக்கு உதவி செய்ய முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை கேரள முதல்வரின் அப்பாயின்மெண்ட் கிடைத்துள்ளதாகவும் அந்த சமயம் தான் ரூ.1 கோடியை முதல்வரிடம் அளிக்கவுள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.