சமூக சேவை செய்யும் இளைஞர்களுக்கு உதவி செய்து ஊக்குவித்த ராகவா லாரன்ஸ்
- IndiaGlitz, [Monday,May 04 2020]
கொரோனா தடுப்பு நிதியாக ஏற்கனவே ரூபாய் 4 கோடிக்கும் மேல் நிதியுதவி செய்துள்ள நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தற்போது மேலும் தாய் என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே
இந்த அமைப்பிற்கு நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஆயிரம் கிலோ அரிசி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிலிருந்து 500 கிலோ அரிசியை யார் யாருக்கு தேவையோ அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக சுறுசுறுப்பாக இளைஞர்களை புத்திசாலித்தனமாக ராகவா லாரன்ஸ் பயன்படுத்தி உள்ளார்.
அவர் தேர்வு செய்த இளைஞர்கள் சிறந்த சமூக சேவை சிந்தனை உள்ளவர்கள் என்பதால் அவர்களை ஊக்குவிப்பது முக்கியம் என்று முடிவு செய்து அவர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து அவர்களின் வங்கிக்கணக்கிலும் ரூ.,25 ஆயிரம் செலவுக்காக டெபாசிட் செய்துள்ளார். இதன் மூலம் இந்த இளைஞர்கள் உண்மையில் யாருக்கு அரிசி தேவை என்பதை அறிந்து அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்களே அந்த அரிசியை சமைத்து உணவாகவும் பொதுமக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்த ஊரடங்கு விடுமுறையில் இந்த இளைஞர்கள் நினைத்திருந்தால் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவு செய்தும் வீடியோ கேம்ஸ் விளையாடியும் இருந்திருக்கலாம். ஆனால் இந்த இளைஞர்கள் அவ்வாறு இன்றி சமூக சேவையே சிறப்பானது என்பதை கொள்கையாகக் கொண்டவர்கள். இந்த இளைஞர்களை சரியான நேரத்தில் ஊக்குவித்து அவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பையும் தந்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுகுறித்து லாரன்ஸ் கூறியபோது, ‘இவர்கள் போன்ற இளைஞர்களின் சேவை தான் தற்போது தேவை என்றும், இவர்கள் என்னை விட சிறந்தவர்கள் என்றும், இதுபோன்ற இளைஞர்களை ஊக்குவிப்பது நமது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.