ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனே செயல்படுத்திய கேரள முதல்வர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடலை தமிழகத்திற்கு எடுத்து செல்ல உதவி செய்ய வேண்டும், அவருக்கான சிகிச்சை கட்டணத்தை தானே செலுத்தி விடுவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கடிதம் எழுதியிருந்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் கடிதம் கிடைத்தவுடன், அசோக் தாயாரின் உடலை உடனடியாக தமிழகம் கொண்டு செல்ல கேரள முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அசோக் தாயாருக்கான சிகிச்சை கட்டணத்தையும் மருத்துவமனை நிர்வாகம் குறைத்துள்ளது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:
முடக்குவாதம் மற்றும் இன்னும் பிற நோய் காரணிகளால் கேரள NIMS தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக பத்திரிகையாளர் அசோக் என்பவரது தாயார் மருத்துவமனையிலேயே இறந்துவிட்ட நிலையில், வறுமையில் வாடும் அந்த பத்திரிகையாளர் மருத்துவமனைக்கு செலுத்தவேண்டிய ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கட்ட முடியாமல் அவதிப்படுவது குறித்து அவரது நண்பர் மூத்த பத்திரிகையாளர் கொ.அன்புகுமார் அவர்கள் மூலம் அறிந்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் மருத்துவக்கட்டணத்தை குறைத்து தர சொல்லி வேண்டுகோள் விடுத்தோம். அவர்களும் 40 ஆயிரம்
தள்ளுபடி செய்து 1 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அசோக்கின் தாயாரது உடலை மருத்துவ பரிசோதனை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
எனது கோரிக்கையை ஏற்று கட்டணத்தை குறைத்துக்கொடுத்த மருத்துவமனை எம்.டி. அவர்களுக்கு நன்றிகள். தற்போது அசோக்கின் தாயரது உடல் தகனம் செய்யப்பட்ட செய்தியையும் அறிந்தேன். இதற்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு. சாய்ரமணி, மலையாள திரைப்பட தயாரிப்பாளர் திரு. லிஸ்டின், பத்திரிகையாளர் திரு.கொ.அன்புகுமார், எனது உதவியாளர் திரு.புவன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) May 9, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments