என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன்: ராகவா லாரன்ஸின் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு!
- IndiaGlitz, [Tuesday,April 14 2020]
நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி அளித்திருந்த நிலையில் மேலும் பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் நிதி உதவி கேட்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பை ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் சற்றுமுன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
கொரோனா ஊரடங்கில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவுவதில் தன்னார்வலர்களுக்கு எந்த தடையும் இல்லை! என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. இந்த நல்ல அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், அதைப்பற்றி தெளிவாக, நடைமுறை விளக்கம் தந்த உயர்திரு காவல்துறை ஆணையர் அவர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
அரசைப் பொறுத்தவரை மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமலும் தடுக்க வேண்டும், அதேநேரம் மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற பெரும் இக்கட்டான நிலை உள்ளது! ஆகவே, தமிழக அரசினால் அறிவுறுத்தி சொல்லப்படும் சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்றி, தன்னார்வலர்களும், என்னுடைய ரசிகர்கள் மற்றும் திருநங்கைகள், அபிமானிகள் உள்பட அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது! நாம் மக்களுடைய பசிப்பிணியையும் போக்க வேண்டும்! அதேசமயம் கொரோனா வைரஸ் பரவாமலும் அரசின் அறிவுரைப்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்!
அந்த வகையில் இயலாத மக்களுக்கு இயன்றவரை உதவிடுங்கள். நானும் நமது தமிழக அரசின் சமூக விலகல் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, என்னால் முடிந்தவரை உதவி வருகிறேன்! அதைப்போலவே
அனைவரும் உதவிடுவோம்! கொரோனாவை வென்றிடுவோம்!
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
— Raghava Lawrence (@offl_Lawrence) April 14, 2020