சொன்ன சொல்லை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்.. சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்க சம்மதம்..!
- IndiaGlitz, [Friday,March 22 2024]
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடந்தபோது ’கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நான் கௌரவ வேடத்தில் நடித்த தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது சண்முக பாண்டியன் நடிக்கும் ’படைத்தலைவன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் அதுவும் சம்பளமே இல்லாமல் அவர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் அன்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் ’படைத்தலைவன்’ படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.
இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம். கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது..
மேலும் தயாரிப்பாளர், மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது, எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார்.
ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் இந்த அணுகுமுறை ’படைத்தலைவன்’ படத்திற்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை , ஊடகங்களுக்கு தெரிய படுத்துவதில், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.