கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு பிரபல நடிகர் பாராட்டு
- IndiaGlitz, [Tuesday,March 17 2020]
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பிரபல நடிகரும் இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:
இன்று உலகையே பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் முழுமையாய் பரவி விடாமல் இருக்க, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துரிதமாகவும் மிகத் தீவிரமாகவும் எடுத்து, கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்திடுவதற்காக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தமிழக முதல்வர் மாண்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி சார் அவர்களுக்கும், , மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் சார் அவர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்கள்!
பொதுவாக ஒரு விஷயத்தில் அரசு சரியாக நடவடிக்கை எடுக்காத பொழுது, எப்படி தட்டிக் கேட்கிற உரிமை நமக்கு இருக்கிறதோ, அதேபோல, ஒரு விஷயத்தில் அரசு சரியாக செயல்படுகிற போது
பாராட்ட வேண்டியதும் நமது கடமை!
தமிழக அரசை பாராட்டுகிற அதே சமயம், பொதுமக்களாகிய நாமும் அரசு எடுத்துக் கூறி வருகிற, சுகாதார பாதுகாப்பு முறைகளை கவனத்துடன் கடைப்பிடிப்போம்! உயிர் நலன் காப்போம்!
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.